|
பக்கம் 1 / 2 பொங்கல் விடுமுறைக்கு சென்று வந்த பிறகு எப்போதும் சில பசுமையான நினைவுகள் எனக்குள் ஆர்ப்பரிக்கும், இருபது வருடங்களுக்கு முன்னாள் சென்று நினைவுகளை மனத்திரையில் ஒருமுறை அசைபோடுவது கூட இந்தத் தமிழர் திருநாளின் சிறப்பை எனக்குள் அள்ளித் தெளித்து பெருமிதம் கொள்ள வைக்கும்.
பொங்கலின் வரவு எப்போதும் தேர்வுகள் நெருங்கும் காலமாக இருக்கும், இந்தியக் கல்வி முறையின் மனப்பாடக் கல்வி தரும் உளைச்சலில் இருந்து விடுபடக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகவும் எனக்கான பொங்கல் இருக்கும், அரசுப் பணியில் இருந்ததால் தந்தையார் பத்து நாட்களுக்கு முன்னரே புத்தாடை எடுக்கும் நிகழ்வைத் தாயாருடன் கலந்து பேசி முடிவு செய்து ஒரு வாரம் முன்னதாய் எங்களையும் அழைத்துக் கொண்டு வாழும் நகரங்களில் துணி எடுக்கும் படலத்தில் இருந்து பொங்கலைத் துவக்குவார்.
வண்ண வண்ணக் கனவுகளில் எங்களுக்கான ஆடைகள் எடுக்கப்பட்டு தையலகங்களில் கொடுக்கப்படும். பொங்கல் விழாவுக்கு மட்டும் ஒரு சிறப்பு அனுமதி உண்டு எனக்கு, தைக்கும் ஆடைகள் விரும்பும் வண்ணம் இருக்கலாம், இடுப்பில் நட்சத்திர ஓட்டைகள் வைத்து, எழுத்துக்களால் அலங்கரித்து நான் நடத்திய கோமாளித் தனங்கள் எல்லாம் இப்போது எனக்குள் நகைச்சுவையாய்த் தெரிந்தாலும், அந்த நேரத்தில் அவை கொடுத்த மகிழ்ச்சியின் விலை மதிக்க முடியாதது. இன்றைய ஆயத்த ஆடைகளின் விலைகளில் இருக்கும் உயரம் கூட அந்தக் கோமாளி ஆடைகளின் முன்னாள் கொஞ்சம் குறுகிப் போகும்.
வாழ்த்து அட்டைகள் வாங்கி அவற்றை உறவினர்க்கும், நண்பர்க்கும் அனுப்பும் வழக்கத்தை ஒரு கடமையாகவே அப்பா கருதியது இன்றளவும் எனக்குள் வியப்பைத் தரும், வாழ்த்து அட்டைகளின் அணிவகுப்பில் குடும்பமே அமர்ந்து முகவரி எழுதுவதுதான் எங்களைப் பொறுத்தவரை பொங்கலின் வருகையை உறுதிப்படுத்தும், முன்னிரவில் அப்பாவுடன் அமர்ந்து முகவரி எழுதும் பணி எங்களுக்குக் கொடுக்கப்படும், அப்பாவின் கவிதையும், அம்மாவின் விமர்சனங்களும் கொண்டு எழுதப்படும் வாழ்த்து அட்டைகள் திருக்குறளின் மேன்மையுடன் நிறைவுற்று அனுப்புதலுக்கு தயாராகும். வாழ்த்தின் உண்மையும் கூட அட்டைகளுடன் அனுப்பப்பட்டது அப்போதுதான். ஒரு நாளைக்கு இருபது அலுவல் சார்ந்த கடிதங்கள் எழுதும் என்னால் கூட, அன்றைக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதங்களின் உள்ளடக்கமான உயரிய தமிழினத்தின் அன்பை ஒரு கடிதத்திலும் இப்போது காண முடிவதில்லை. கடிதம் எழுதும் பழக்கமே மறந்து போன ஒரு மின்னஞ்சல் தலைமுறை இன்றைக்கு "நலமாக இருக்கிறீர்களா" என்பதை "hw r u?" என்று சுருக்கி விட்டது.
அப்போதெல்லாம், இரண்டு நாட்களுக்கு முன்னரே கிராமத்திற்குச் சென்று விடும் எங்களுக்கு இதயத்தின் தேங்கிய அன்பெல்லாம் சேர்த்துக் கிடைக்கும், ஐயாவும், அப்பத்தாவும், பெரியப்பாக்களும், பெரியம்மாக்களும் எங்களை வரவேற்று உபசரிக்கும் காலம் இனி வரவே இயலாத அளவிற்கு குடும்பங்களும், உறவுகளும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டன. கண்மாய் நண்டுகளும், ஆராக்கீரைகளும் உணர்த்திய உறவுகளின் வெம்மை பொங்கல் காலங்களின் பின்பனி இரவுகளை எளிமையாக்கும். மலையடிக்குக் குளிக்கப் போவதற்காகவே விரைவில் எழுந்து விடுவோம், போகிற வழியில் படர்ந்திருக்கும் காந்தள் மலரின் ஆங்கிலப் பெயரை ஐயாவுக்குச் சொன்னபோது ஏதோ ஆல்வா எடிசனின் மின்சாரக் கண்டுபிடிப்பைப் போல மகிழ்ந்து என்னை தூக்கி மடியில் வைத்துக் கொள்வார் அந்தப் பெரியவர்.
<< முதல் < முந்தைய 1 2 அடுத்த > கடைசி >> Last update : 22-01-2009 10:10
|
|
|