வானம் பார்த்த பூமியாய்க் கிடக்கும் தமிழ் திரை உலகில் எப்போதாவது காடும் கழனியும் செழிக்க நல்லமழை பெய்வதுண்டு.முப்போக விளைச்சல்,ரசனை ததும்பும் சந்தோச வெள்ளம்.அந்த வகையில் சமீபத்தில் கள்ளியும், கற்றாழையும், கருத்த பக்கிகளும், கரும் பனைகளும் மண்டிக்கிடக்கும் கரிசல் காட்டுப்பூமியில் பூத்து தமிழ் சினிமா உலகில் மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது - 'பூ'திரைப் படம்.
அனைத்து ஊடகங்களிலும் உச்சியில் வைத்துக் கொண்டாடப்படுகிறது பூ.விமர்சகர்கள் எல்லாம் வெகுவான பாராட்டு.தோற்றுப்போன காதலை ஒரு பெண்ணிய நோக்கில் மண்வாசனை மாறாமல் சொல்லப்பட்டிருப்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசு.
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்’- சிறுகதையை இவ்வளவு அற்புதமாய் சினிமாவில் செதுக்கி அதற்குரத்தமும் சதையும் கொடுத்திருப்பவர் இயக்குனர் சசி.அவருடன் சேர்ந்து பூ படத்தின் காட்சிகளை நிஜமாகவே மலரச் செய்திருப்பவர் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா.இது அவருக்கு முதல்படம்.
ஒளிப்பதிவாளர்கள்கதிர், ரவிவர்மன் போன்ற ஜாம்பவான்களிடம் இவர் கற்ற பாடம் அதிகம்.திருச்சியில் பிறந்து சென்னையில் காட்சி ஊடகம் படித்தவர். இன்ஜினியரிங் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர் போல் இருக்கும் முத்தையாவிடம் பேட்டி என்றதும் நிறையவே வெட்கப்பட்டார்.இவர் கற்றதும் பெற்றதும் அதிகம் என்றாலும் அனைத்துக் கேள்விகளுக்கும் அளவாகவே பதில் சொல்கிறார்.அவ்வளவு அவை அடக்கம். முதல் படத்திலேயே கவனிக்க வைத்துள்ள முத்தையாவுக்கு அதிகாலையின் வாழ்த்துக்களுடன் இந்தப் பேட்டி நீள்கிறது.