|
பக்கம் 1 / 2 சில காட்சிகள், சில நிகழ்வுகள் சிலவற்றை நினைவுபடுத்தும். அவை மனதுக்குள் குதூகலத்தையும் வர வைக்கலாம் அல்லது மனதின் எங்கோ ஓர் மூலையில் வலியையும் ஏற்படுத்தலாம் அல்லது அதுவே நெருடலாகவும் இருக்கலாம். இப்படி எல்லோருக்கும்போல் எனக்குள்ளும் ஏற்பட்டவைகளைத்தான் இனி நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
நல்ல மழை! ஆம்! மழை என்றால் பேய் மழை. நான் பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கிறேன். காரணம், என்னோடு பள்ளிக்கு வருபவர்கள் அனைவருமே கையில் குடை வைத்திருக்கிறார்கள். ஆம், அந்த வயதில் பள்ளிக்கு குடை கொண்டுவந்தால் ஏதோ ஒரு பெரிய சாதனையாளன் போன்ற ஒரு தொணியில் நடைகூட மாறிப்போய்விடும். சிலர் மட்டும் கலர் கலராய் விற்கும் பாலித்தீன் கவர்களை, (எங்கள் கிராமங்களில்கொங்கானி என்று சொல்லப்படும்) மடித்து, புத்தகப்பையோடு கொண்டுவருவர். எங்கள் வீட்டிலிருந்த ஒரு குடையையும் என் அப்பா வெளியில் எடுத்துச்சென்றுவிட்டார். இன்னொரு குடையோ, கம்பி நீட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்துச்சென்றால் அனைவரும் சிரிப்பார்கள் என்று அடம் பிடித்து அழுதுகொண்டிருந்தேன். வெளியில் பார்த்தால் மழை விட்டிருந்தது. ஓ.... இதுதான் சமயம் என்று நினைத்து, அடுத்த மழை வருவதற்குள் பள்ளி சென்றுவிடலாம் என்று எண்ணி, கிளம்புகிறேன்.
திடீரெனச் சந்தேகம், போகும் வழியில் மழை வந்துவிட்டால்! சரி, அதற்கு அம்மாவிடம் "அம்மா நல்ல ஒரச்சாக்கு இருந்தா, மடிச்சுக் குடும்மா" என்கிறேன். "எப்படியும் இந்த வாரச் சந்தையில ஒரு கொடை வாங்கியாந்துருவம்யா"எனஅம்மாவும்ஒரு வழியாக என்னைச் சமாதானப்படுத்தி, வயல்களில் உரம் போட்டு, சுத்தமாகக் கழுவிக் காயவைத்து, மடித்து வைக்கப்பட்டு, இருப்பதிலேயே கொஞ்சம் 'பளிச்' என இருக்கும் ஒரு சாக்கை எடுத்து, கொங்கானி-யாக மடித்து,
"என் ராசா, என் தங்கம்....எம்புட்டு சமத்துப் புள்ளயில… இந்தாடி, ராசா! தலையில போட்டுக்கய்யா, தூத்த விழுகுது" என அம்மா அந்தச் சாக்கை என் தலையில் போட்டு, புத்தகப்பையை நனையாமல் உள்பக்கமாக வைக்கச் சொல்லி வழியனுப்பினாள்.
பள்ளிக்கூடம் கிட்டத்தட்ட 2-3 கி.மீ இருக்கும். போகும் வழியில் சாக்கை மடித்துத் தலையில் போட்டுக்கொண்டால் யார் பார்க்கப்போகிறார்கள்? பள்ளிக்கு அருகில் சென்றதும் ஆவரைத்துறில் மடித்து வைத்துவிட்டு மாலை வரும்போது எடுத்து வந்து விடலாம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு புறப்படுகிறேன். காரணம் ‘படிப்பில் அவ்வளவு அக்கறை’ எனத் தவறாக நினைக்கவேண்டாம்.பள்ளிக்குப் போகாவிட்டால் "முதுகுப்பட்டைத்தோலு பிஞ்சுரும்" என் அப்பாவின் இந்த ஸ்லோகம் என் காதுகளுக்குள் அவ்வப்போது ஒலிக்கத் தவறியதில்லை.
ஒரு வழியாக,நான் புறப்பட்டு எங்கள் ஊர் கண்மாய்க் கரை வழியாகச் சென்று கொண்டிருக்கையில், வயல் பக்கம் எங்கள் ஊர் "நொண்டி சுப்ரமணி" எருமை மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அந்தக் காட்சி என் கண்களை வெகுவாக உறுத்தியது. ஒரு பக்கம் வயிற்றெரிச்சல் வேறு. நான் அவரைப் பார்த்துக்கொண்டே செல்கிறேன். அவரும் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார். "தம்பி! நில்லுய்யா" என்று என் அருகே வருகிறார். நான் நிற்கிறேன். "இந்தா வச்சுக்க, எடுத்துகிட்டுப் போய்ட்டு, சாயந்தரம் கொண்டாந்து குடு" என்று தன் கையில் இருந்த பட்டன் குடையை நீட்டுகிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்து நிற்கிறேன். "அட! என்ன அப்படி முழிக்கிற, இங்கெ பாரு...இந்தா இருக்குல பட்டன், அத அமுக்குனா அதுவா விரிஞ்சுக்குரும், சுருக்கும்போது மாத்தரம் கொஞ்சம் சூதானமா சுருக்கோணும், இல்லாட்டி கண்ணு-காத கெடுத்துப்புரும் சரியா" என்றதும்,
"அப்ப ஒனக்கு" என்கிறேன்.
"எரவா மாடு மேய்க்கிறவனுக்கு எதுக்குய்யா பட்டன் கொடை? நீ படிக்கிற புள்ள....சரி சரி..அந்தக் கொங்கானிய எங்கிட்ட குடு, நீ கௌம்பு, பள்ளிக்கொடத்துக்கு நேரமாச்சு"
<< முதல் < முந்தைய 1 2 அடுத்த > கடைசி >> Last update : 11-10-2008 07:49
|
|
|
பட்டன் குடை
By: நவின் () on 11-10-2008 17:55