|
பக்கம் 1 / 2 அந்தக் காலத்தில் பள்ளிகளில் பத்தாம் மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களையும், கல்லூரி மாணவர்களையும், ஆயிரக் கணக்கான இளைஞர்களையும் மயக்கிய சொல் ஒன்று உண்டென்றால்
அது 'அண்ணா' என்ற மூன்றேழுத்துச் சொல்தான். எஸ்.பி.வி.ஆர்.சுப்பையா
 படம் எடுக்கப்பெற்ற தேதி: 15.12.1967 அப்போது நான் சேலத்தில் பள்ளி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தேன். என் பெற்றோர்கள் அதுசமயம் அந்த ஊரில்தான் இருந்தார்கள். வருடம் 1967 பொதுத் தேர்தல் நடக்கவிருந்த சமயம். அடிக்கடி தி.மு.க' வின்
பிரச்சாரம் ஊரெங்கும் நடக்கும். அறிஞர் அண்ணா அவர்கள் அடுத்தடுத்துக் கூட்டங்களில் கலந்து கொண்டு அற்புதமாக உரையாற்றுவார். அதைக் கேட்பதற்குக் கூட்டம் அலை மோதும். அடுத்த நாள் பரிட்சை என்றாலும் கவலையின்றி முதல்நாள் கூட்டத்திற்குப் போய் விடுவேன். K.A.மதியழகன், சத்தியவாணி முத்து அம்மையார்,
கலைஞர் மு.கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் என்று ஒரு வரிசையில் அனைவரும் பேசிய பிறகு,
அண்ணா அவர்கள் பேச விழைவார். அவர் பேச எழுந்தவுடனேயே கூட்டத்தினரின் கரகோஷம் காதைப் பிளக்கும்.
ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் அதிரடியாகப் பேசுவார். உதாரணத்திற்கு ஒரு இடத்தில் அவர் கலக்கலாகப் பேசிய உரையொன்றின் சிறு பகுதியை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.
"அன்று உத்தமர்கள் இருந்திருக்கலாம். இன்றுள்ளவர்கள் உளுத்தவர்கள் என்று உதாசீனப் படுத்தப் படலாம். ஆனால், உத்தமர்கள் காலத்திலேயும், 'அவதார புருஷன்' இராமன் காலத்திலேயும், நளன் காலத்திலேயும்,
அரிச்சந்திரன் காலத்திலேயும், தண்டவாளம் இல்லை. இரயில் ஓடியதாகக் காணோம். ஆனால் உளுத்தர்கள் என்று கூறப்படுகின்ற நம்முடைய நாசகாரக் காலத்திலே, இரயில் ஓடுகின்றது. இந்த உத்தமர்கள் - அவதார புருஷர்கள் - காலத்திலே, சீதை காணாமற் போனவுடன், இராமன்,
'ஏ மரமே,
கொடியே,
மலரே,
வண்டே,
பறவையே,
புள்ளினமே,
முகிலே,
முகிலூறும் வானே,
நிலவே,
என் சீதையைக் கண்டீரா?
என்று கேட்டானே தவிர, டெலிபோனை எடுத்து, அயோத்தியை அழைத்து, "சீதை அவ்விடம் வந்தாளா?" என்று கேட்டு, 'இல்லை' எனறறிந்ததும்; ஜனகருக்குத் தந்தியடித்துக் கேட்டு, இல்லையென அறிந்ததும்; டிரங்காலில்,"என் சீதையக் கண்டீரா?" என்று இராவணனைக் கேட்டாரா?
வேண்டுமானால், இராமன் அவதார புருஷனாக இருக்கலாம்; ஆனால் அவன் காலத்தில் 'வயர்லஸ்' கிடையாது.
இராமனுக்குத் தெரிந்ததெல்லாம், அயோத்தி, கிஷ்கிந்தா, தண்டகாரண்யம், ராமேஸ்வரம், சேது, இலங்கை - இவ்வளவுதான்.
ஆனால் நமக்கோ, நம்முடைய காலத்திலே, உலகத்தையே ரேடியோ மூலம் அறைக்குள் அழைக்கின்றோம். லண்டன் வைத்தால் லண்டன்; வீயன்னா வைத்தால் வீயன்னா; பாரிஸ் வைத்தால் பாரிஸ். உலகத்தில் எந்தப் பாகத்தில் வைத்தாலும் சரி உலகமே நம்முடைய அறைக்குள் வருகிறது. தேவலோகத்திலே நாதருக்குத்தான் முழு வேலை. ஈரேழு பதினாலு லோகமும் சுற்றிக்கொண்டே இருப்பார். ஆனால் நம்முடைய காலத்தில் ரேடியோவைத் திருப்பி விட்டால், உலகம் முழுவதும் நம் கண் முன்னே வருகிறது. வியாசர் கூப்பிட்டபோது உலகம் வரவில்லை, வசிட்டர் கூப்பிட்டபோது வரவில்லை நாம் கூப்பிட்டபோது
உலகம் நம்முன் இருக்கிறது.
நம் நாட்டில் எத்தனை பேருக்கு விஞ்ஞானியாக ஸர். சி.வி. இராமனைத் தெரியும்? ஒரு போலிப் பகல் வேஷசச் சாமியாரைப் பற்றித் தெரிந்த அளவிற்குக்கூட,ஸர்.சி.வி. இராமனைப் பற்றித் தெரியாதே!"
ஒருமுறை, கழகப் பெண் பேச்சாளர் ஒருவர், மேடையில், அந்தச் சமயம் ஆட்சியில் இருந்த காங்கிரசாரைச் சாடும் விதமாக மிகவும் கேவலப்படுத்திப் பேசிவிட்டார்.
"காங்கிரஸின் மேலிடத்திற்கும், அதன் வட்டாரத்தலைவர்களுக்கும் ஒற்றுமையில்லை. பதவி மேல்
ஆசைப்பாட்டு அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்" என்பதைச் சொல்ல வந்தவர் இப்படிச் சொல்லி விட்டார் :
"வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் ஆசை;
வண்ணாத்திக்குக் கழுதை மேல் ஆசை!"
<< முதல் < முந்தைய 1 2 அடுத்த > கடைசி >> Last update : 16-09-2008 07:54
|
|
|