|
வர்த்தக மசலா என்றாலும்,அறிமுக இயக்குனர் வெற்றி மாறனிடம் ஒரு பெரிய முதிர்ச்சி தெரிகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நிறைவான நிறைகளும்,குறைவான குறைகளும் கொண்ட படம்.
கதை: நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தனுஷ்.வேலை இல்லை.கூடவே அம்மா,அப்பா,தங்கை. நண்பர்களுடன் நிறையக் குடிக்கிறார்.நிறைய ஊர் சுற்றுகிறார்.இதனால் ஆத்திரம் அடையும் அப்பா அவரை அடிக்க முற்படுகிறார்.அப்பொழுது எனக்கு நீ என்ன செயதாய் என்று அப்பாவிடம் திருப்பிக் கேட்க,சேர்த்துவைத்த 70 ஆயிரம் ரூபாயையும் மகனிடம் கொடுக்கிறார்.தனுஷின் கைகளில் பல்ஸர்.பைக் வைத்துக் கொண்டு வேலை தேடும் தனுஷுக்கு வங்கியில் கடன் வசூலிக்கும் பணி.காதலும் கை கூடுகிறது. இச்சூழ்நிலையில் ஒரு நாள் பைக் காணாமல் போய்விடுகிறது.வில்லனின் கைகளில் மாட்டிய பைக், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுகிறது.பைக்கை தேடி அலையும் தனுஷ்,வில்லனுடன் மோதுகிறார்.மீண்டும் கதாநாயகனின் கைகளில் பல்சர் பைக்.இதுதான் கதை. கதை சொல்லும் உத்தி: வில்லனின் ஆட்களை வெட்டிவிட்டு,ரத்தத்தோடு வரும் தனுஷ்,கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.அடுத்து வில்லனும்,கதா நாயகனும் சந்திக்கும்போது வில்லனின் பின் நோக்கு உத்தியில் கதை சொல்லப்படுகிறது.இது புரிதலுக்கு சிரமமில்லாத புதுவிதமான உத்தி. காதல் ஊறுகாய்: கதாநாயகியாய் திவ்யா.ஒப்பனைகள் அதிகமில்லாத முகம்.இயற்கையாய் அழகு காட்டியிருக்கிறார்.முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் குறைவின்றி நடித்திருக்கிறார். வடசென்னையின் வாழ்க்கைப் பதிவு: சினிமாவில் காட்டப்படும் சென்னை என்றால் அதில் மெரினாவும்,அண்ணா மேம்பாலங்களும்,ராஜஜி அரங்கமும் மட்டுமே காட்டப்பட்டுவரும்.இந்த மரபை மாற்றியவை பாரதிராஜாவின் என்னுயிர்த் தோழனும்,செல்வராகவனின் புதுப் பேட்டையும்தான்.அது இன்னும் யதார்த்தமாக இப்போது பொல்லாதவனில். படத்தின் இராண்டாம் பாகம் மீனுக்கு காத்திருக்கும் கொக்கின் கவனம் ரசிகர்களிடம் இருக்கிறது.கதாநாயகனின் வாழ்க்கையைவிட,வில்லனின் வாழ்க்கை இயக்குனருக்கு பரிச்ச்யப்பட்டதாக இருக்க வேண்டும்.வில்லனின் குழந்தை,நாயின் மலத்தை எடுத்துவருவது,அதைக் காட்சிப்படுத்தியிருப்பது எல்லாமே அழகு.படைப்பின் முதிர்ச்சியுள்ள காட்சி. காட்சியின் தன்மைக்கேற்ப முகபாவஙகள் காட்டும் தனுஷின் நடிப்பில் மேன்மை தெரிகிறது.குறிப்பாய் மருத்துவ மனை காட்சிகளில்.கன்னட நடிகர் கிஷோர்குமார் தமிழுக்கு நல்வரவு.வழக்கம் போல் டேனியல் பாலஜி. வேல்ராஜின் ஒளிப்பதிவில் பெரும்பாலான காட்சிகள் இரவில் எடுக்கப்பட்டு இருக்கின்றன.படத்துக்கு பெரிய பலமாய் ஒளிப்பதிவு.பிரகாஷ்குமாரின் இசை ஏமாற்றவில்லை. வர்த்தக மசலா என்றாலும்,அறிமுக இயக்குனர் வெற்றி மாறனிடம் ஒரு பெரிய முதிர்ச்சி தெரிகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நிறைவான நிறைகளும்,குறைவான குறைகளும் கொண்ட படம். - அதிகாலை விமர்சனக் குழு. Last update : 04-01-2008 05:42
|