|
துணிச்சல்மிக்க மையக்கருத்திற்க்காக படத்திற்கு "A" சர்டிபிகேட். பத்திரிக்கையாளர் ஆதிராஜ் தனது நீண்ட கால பத்திரிக்கை வேலையை துறந்து இப்படத்தை இயக்கியுள்ளார்.
இருபது நிமிடத்திற்கொருதரம் கனவுப்பாடலும், மரத்தைச் சுற்றி ஹீரோவும், ஹீரோயினும் ஓடிக் கொண்டும், தலைவலியில் ஆழ்த்தும் நீண்ட வசனங்களுமில்லாமல் 25 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி 100 நிமிடத்தில் படத்தை முடித்ததற்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ்.
தமிழ்ச் சினிமாவில் புதிதாக ஏதோ சாதிக்க வேண்டும் என்றெண்ணி,ஹாரர், சஸ்பென்ஸ், த்ரில்லர் என சகலமும் கலந்து புதுமையாக தரவேண்டி பல இடங்களில் சொதப்பியிருக்கிறார்.
கதை: முன்னா ,மோனிகா புதுமணத் தம்பதிகள். தேனிலவிற்கு ஒரு ரிசார்ட்டுக்கு செல்கிறார்கள். அடுத்த 48 மணி நேரத்தில்,அவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் படம். தன்னந்தனி ரிசார்ட்டில் ஒரு புதிர் மனிதன் பின்தொடர்கிறான்.ஒரு புதிர் என்றால் தமிழ்சினிமாவின் கலாசாரப்படி ஒரு ப்ளாஷ்பேக் இருக்க வேண்டும்.
இங்கேயும் ஒரு ப்ளாஷ்பேக் ஹீரோவிற்கல்ல,ஹீரோயினுக்கு! மென்பொருள் மற்றும் கால்செண்டர் கலாச்சாரத்தை உரித்திருக்கிறார்கள். மோனிகாவின் தோழிகள் "பெரிய" இலக்கு சம்பளம் வாங்கும் மென்பொருள் இஞ்சினியர்கள். எதையெல்லாம் நம் கலாசாரத்தில் செய்யக்கூடாது என்கிறார்களோ அதையெல்லாம் செய்கிறார்கள் !
வேறென்ன, தண்ணி, தம், "டேடிங்"! இவர்கள் கூத்தில் பாவமாக ஒரு எல்.ஐ.சி ஏஜெண்ட் மாட்டிக் கொண்டு தப்பித் தவறி இறந்து விடுகிறான். மோனிகா வெறும் பார்வையாளர்! அடுத்து என்ன நடக்கும் என ஆறாம் கிளாஸ் மாணவன் கூட கூறிவிடுவான். மோனிகாவின் மூன்று தோழிகளும் ஒருவர் பின் ஒருவராக கொலை செய்யப்படுகிறார்கள்.இருதியில் மோனிகா மட்டும் மிஞ்சியுள்ளார். துணையாக அவருக்கு தோள்கொடுக்க கணவன் முன்னா! க்ளைமேக்ஸ் வெள்ளித் திரையில்!

அழகியில் நந்திதாவின் சிறுவயது பெண்ணாக நடித்த மோனிகாவா இது!! "நல்ல தாராள முன்னேற்றம் !" படத்தில் இவர் தான் மையக் கரு.அதனால் தன்னால் முடிந்த "தாராள சேவையை" செய்தாலும் அவ்வப்போது நன்றாகவும் நடித்துள்ளார். இன்றைய இளைய சமுதாயத்தை பிரதிபலிக்கும் பெண்ணாக மனதிற்குள் புகுந்துவிடுகிறார்.
ஹீரோ முன்னாவிற்கு (அந்த கால மலையாள நடிகை ஜெயபாரதியின் உறவு) படத்தில் சொல்லிக்கொள்ளும் படியான கதாபாத்திரம் இல்லை. ஆனால் பட ரிலீசிற்கு முன் தன்னால் முடிந்த ச்ர்ச்சையை(மோனிகாவிடம் வாங்கிய பளார! கிளப்பிவிட்டு படத்தின் இலவச விளம்பரத்திற்கு உதவிவிட்டார். 
இப்படம் பெங்களூரூவில் 20 மாதத்திற்கு முன்னர் நடந்த உண்மைக் கதை என இயக்குனர் கூறியுள்ளார்.ஹாரர் படத்திற்க்கான அதே கதையை தேர்ந்தெடுத்து அரைத்த மாவையே கொஞ்சம் புதிதான முறையில் அரைத்துள்ளார். புதுச்சேரியிலிருந்து 20 கிமி தொலைவிலுள்ள ஒரு தீவில் படமெடுத்துள்ளார்கள். இயர்கையழகு நம் உள்ளத்தை கொள்ளைக் கொண்டு போகிறது.போசியா பாதிமாவின் கேமரா இதற்கு அழகு சேர்க்கிறது.
நடிப்பு : முன்னா,மோனிகா,ரியாச் கான்,நெல்லை சிவா
இயக்கம் : ஆதிராஜ்
இசை : எம்.ஆர்.கார்த்திக்
சிலந்தி : சரியாக வலைப் பின்னவில்லை
அதிகாலை ரேட்டிங்: ** Last update : 15-05-2008 12:36
|