|
வவுனியா முகாமில் உள்ள தமிழர்கள் வெள்ளை வேனில் வருபவர்களால் தினந்தோறும் கடத்தல்: அச்சத்தில் இடம்பெயர்ந்தவர்கள் : வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பகுதியில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அங்கு டொல்பின் ரக வெள்ளை வேனில் வருபவர்களால் தினந்தோறும் கடத்திச் செல்லப்படுவதாக பி.பி.சி.யின் சிங்கள சேவையான 'சந்தேசிய' செய்தி வெளியிட்டிருககின்றது. இது தொடர்பாக பி.பி.சி.யின் செய்திச் சேவைக்கு முகாமில் இருந்து தகவல் தெரிவித்த இடம்பெயர்ந்த ஒருவர், இந்த வெள்ளை வேன் அச்சம் காரணமாக குறிப்பிட்ட வெள்ளை வேனைக் கண்டதும் மக்கள் அனைவரும் தமது கூடாரங்களுக்குள் ஒளிந்துகொள்வதாகவும் தெரிவித்தார்.
"குறிப்பிட்ட வேனைக் கண்டவுடன் அனைவரும் மறைந்துகொள்வதால் என்ன நடைபெறுகின்றது என்பதை சரியாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை" எனத் தெரிவித்த முகாம் வாசி ஒருவர், "ஆனால் இந்த முகாம்களில் இருந்து தினந்தோறும் இரண்டு, மூன்று பேர் காணாமல் போகின்றார்கள் என்பது எனக்குத் தெரியும்" எனக் குறிப்பிட்டார்.
முகாமில் உள்ளவர்களில் சிலர் அதிகாரிகளுக்குப் பணத்தைக் கொடுத்து இரகசியமாக வெளியேறிவிடுவதாகவும் அவர் தெரிவித்தார். "சிலர் திடீரெனக் காணாமல் போய்விடுகின்றார்கள். ஆனால், அவர்கள் கடத்தப்படுகின்றார்களா அல்லது அதிகாரிகளுக்குப் பணத்தைக் கொடுத்து தப்பிச் சென்றுவிடுகின்றார்களா என்பது தெரியவில்லை" எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தனது பாதுகாப்புக் காரணத்துக்காக தன்னை அடையாளம் காட்டாமல் பி.பி.சி. 'சந்தேசிய'வுக்கு கருத்துத் தெரிவித்த குறிப்பிட்ட நபர், முட்கம்பி வேலிகளால் பிரிக்கப்பட்ட பகுதியிலேயே தாம் தமது உறவினர்களைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
"உறவினர்களைச் சந்தித்துப் பேசுவதற்காக முகாமுக்கு வெளியால் கூடாரங்கள் சில அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள முட்கம்பி வேலிகளில் இருந்து ஐந்து மீட்டர் தொலைவில் இருந்தே இரு தரப்பினரும் பேசிக்கொள்ள முடியும். தமது உறவினர்களுக்கு பிஸ்கட் அல்லது பழங்கள் போன்ற எதையாவது அவர்கள் கொடுக்க விரும்பினால், கைகளில் கொடுக்க முடியாது. முட்கம்பி வேலிகளுக்கு மேலாக அவற்றை எறிய வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.
"முகாம்களில் நாளாந்தம் மூன்று வேளை உணவு வழங்கப்படுகின்றது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரேவேளையில் சமையல் செய்யப்படுவதால் குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் சாப்பிடக்கூடியளவுக்குச் சுவையானதாக இருப்பதில்லை.
உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்போது இடம்பெயர்ந்த மக்கள் தமக்குரிய சமைத்த உணவை அல்லது உலர் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டியிருக்கின்றது. இந்த நிலைமை முகாமுக்கு முகாம் மாறுபடுகின்றது.
மழை தொடர்ந்தால் இந்த முகாம்களில் வசிக்க முடியாத நிலைதான் ஏற்படும். மழை வெள்ளம் முகாமில் உள்ள கூடாரங்களுக்குள் புகுந்துவிடுவதுடன், மலசல கூடங்கள் நிரம்பி வெள்ளத்துடன் கலப்பதால் ஏற்படும் தூர்நாற்றமும் இதற்குக் காரணம்.
தற்போதைய நிலையில் வேலைகள் முன்னெடுக்கப்பட்டால் இந்த முகாம்களில் உள்ளவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு மேலும் மூன்று வருடங்கள் செல்லும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
TNC
Last update : 25-08-2009 20:08
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|