|
படம் ஆரம்பித்தவுடனே ஹீரோவின் பில்டப்,பத்து நிமிடத்திற்கு ஒருமுறை "பஞ்ச டயலாக்",அனைவரும் எப்படி வாழ்க்கையில் உருப்பட வேண்டும் என அறிவுரை கூறுவது,அவ்வப்போது புள்ளிவிவரத்துடன் கடந்த கால ,நிகழ்கால அரசியலை மறைமுகமாக சாடுவது என கேப்டன் படத்தில் எப்போதும் இருக்கும் அம்சங்களை எதிர்ப்பார்த்து போனால் ஏமாந்து போவீர்கள்!
மற்ற விஜய்காந்த் படங்களிலிருந்து "சிறிது" மாறுபட்டு மெருகேறிய திரைக்கதை,பிரமாண்ட செட்கள்,கண்ணுக்கு குளிர்ச்சியான வெளிநாட்டு இடங்கள், உடல் புல்லரிக்கும் காட்சிகள் என பல இடங்களில் அசத்தியுள்ளார்கள்.
இத்தனை அம்சங்கள் படத்தில் இருந்தாலும் "தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவையும்,இந்தியர்களையும் காக்கும்" அதே பழைய கதை! இயக்குனர் திரைக்கதையில் வித்தியாசத்தைக் காட்ட முயன்று சிறிது வெற்றியும் பெற்றிருக்கிறார்.
கதை:- தொன்றுதொட்டு விஜய்காந்த் படம் பார்ப்பவர்களுக்கு தெரிந்த " தீவிரவாதிகளின் கைவரிசைகளை தனது புத்திசாதுர்யம் மற்றும் புஜபலத்தாலும் வெல்லும் " கேப்டனுக்கே உரித்தான கதை.
இங்கே விஜய்காந்த் ஐபிஎஸ் ஆபிசர்,கிரிமினாலஜியில் நிபுணத்துவம் பெற்றவர். இந்தியாவின் தலைசிறந்த குடிமகன்கள் ஒவ்வொருவராக வரிசையாக கொல்லப்படுகின்றனர். இத்தொடர் கொலைகளை விசாரணை செய்ய "பிஜு-மேனன்" வருகிறார். அவரும் விமானத்திலேயே கொல்லப்படுகிறார். இந்தியாவிற்கு கேப்டனை விட்டால் வேறு கதி ஏது? தீவிரவாதிகளின் திட்டங்களை முறியடிக்க களமிறங்குகிறார் கேப்டன்!
தீவிர விசாரணையில் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க தீவிரவாதிகளால் திட்டமிட்ட "ஆபரேஷன் ப்ளூ தண்டர்" -ஐ கண்டு பிடிக்கிறார். இத்திட்டம் இந்தியாவின் விஞ்ஞானிகள்,பொருளாதார நிபுணர்கள்,அரசியல்வாதிகள் என அனைவரையும் குறிவைக்கிறது.
மீதக் கதை வேறென்ன ?எதிரிகளை துவம்சம் செய்து நாட்டைக் காப்பாற்றுகிறார் கேப்டன்.
இயக்குனர் மாதேஷ் உப்புசப்பில்லாத கதைக்கு ,உயிரோட்டமுள்ள திரைக்கதையை அமைத்ததற்கு ஒரு சபாஷ் போடலாம். அதற்காக பல ஆங்கில படங்களிலிருந்து காப்பியடித்திருக்கிறார்.முதல் பாதி படம் விருவிருப்பாக செல்கிறது. இரண்டாம் பாதி சில நேரங்களில் ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டு போவதை தவிர்த்திருக்கலாம்.
கேப்டனின் காஸ்டூயூம் டிசைனரை பாராட்ட வேண்டும். மனிதர் கொஞ்சம் எடையை கம்மி செய்யலாம். ராக்கி ராஜேஷின் சண்டை காட்சிகள் நியுட்டன் விதிகளை ஏற்க மறுக்கிறது. விஜய்காந்தின் படங்களில் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் சண்டை காட்சிகள் ,இங்கே கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகின்றன.
வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு ப்ளஸ் பாய்ண்ட்!கனடாவில் ஷூட் செய்யப்பட்ட காட்சிகள் நம் மனதை கொள்ளை கொள்கின்றன.ஸ்ரீகாந்த் தேவாவின் இசை "சின்ட்ரல்லா" பாட்டைத் தவிர சொல்லிக் கொள்ளும்படி இல்லை.ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி திரையில் கேப்டன் அரசாங்கத்தை நடத்துகிறார். முந்தைய படங்களிலிருந்து வித்தியாசப்பட்டு தெரிகிறது அரசாங்கம்.
அரசாங்கம்: "கேப்டன் இஸ் பேக்"
அதிகாலை ரேட்டிங் : *** Last update : 13-05-2008 13:18
|