|
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த சென்னை சிறுவன் சஞ்சய் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தான். தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு முதல் உயிரிழப்பு என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கைகள் பல மடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியாக சென்று மாணவ, மாணவிகளிடம் மருத்துவ பரிசோதனை நடத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மெக்சிகோவில் இருந்து 'எச்1என்1' என்ற வைரஸ் கிருமி மூலமாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு பன்றிக் காய்ச்சல் சில மாதங்களுக்கு முன்பு பரவியது. அந்த நாடுகளில் இருந்து வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்கள் மூலமாக உலகின் பல நாடுகளுக்கும் இந்நோய் பரவியது. ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் இந்தியாவிலும் பன்றிக் காய்ச்சல் பரவியது. இதையடுத்து, நாடு முழுவதும் விமான நிலையங்களில் சிறப்பு கண்காணிப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. நோய் அறிகுறி காணப்பட்டவர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் புனேயை சேர்ந்த ரீடா ஷேக் என்ற 14 வயது சிறுமி கடந்த 3-ம் தேதி பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானாள். பன்றிக் காய்ச்சலுக்கு நம் நாட்டில் முதல் பலி என்பதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மும்பையை சேர்ந்த பமிதா பன்வாலா (54), புனேயை சேர்ந்த ஆசிரியர் சஞ்சய் துக்காராம் கோக்ரே (42), நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரவீன் படேல் (43) என மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அடுத்தடுத்து 3 பேர் இறந்தனர். புனேயில் பாலா சாகேப் லட்சுமண் மான் என்பவர் இன்று பலியானதால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் சென்னையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் சஞ்சய்யும் இன்று பலியானான்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்த சிறுவன் சஞ்சய் (4). யு.கே.ஜி. படித்து வந்தான். கடந்த 10 நாட்களாக காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு இருந்தான். நோய் அதிகமானதால் சென்னை சேத்துப்பட்டில் உள்ள மேத்தா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தான். அவனது சிறுநீரகம், கல்லீரல் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
காய்ச்சல் தீவிரமானதால் ரத்தப் சோதனை செய்யப்பட்டது. சிறுவனுக்கு ஏற்பட்டிருப்பது பன்றிக் காய்ச்சல் என கடந்த வெள்ளிக்கிழமை தெரியவந்தது. தொடர்ந்து தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், அவனது உடல் உறுப்புகள் செயல் இழக்க ஆரம்பித்தன. நேற்று வரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிறுவன் சஞ்சய், இன்று காலை 8.45-க்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோயின் முதல் உயிரிழப்பு என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பன்றிக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கும் பணியிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் தமிழக பொது சுகாதாரத்துறை, மாநகராட்சி சுகாதாரத் துறையி னர் தீவிரமாக இறங்கியுள்ளனர். சென்னை முழுவதும் உள்ள அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் மண்டல சுகாதாரத் துறை அதிகாரிகள் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் இன்று காலை சென்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. எந்த குழந்தைக்காவது காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி இருந்தால் உடனே ரத்த மாதிரியை எடுத்து பன்றிக் காய்ச்சல் சோதனைக்காக அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
வேளச்சேரி பகுதியில் உள்ள எல்.ஐ.சி. காலனி பகுதியில் சிறுவன் சஞ்சய்யின் வீட்டருகே உள்ளவர்கள் மற்றும் அவனுடன் படித்த மாணவர்கள், உறவினர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது.
செயல்படும் பள்ளிகளில் பிரேயர் நேரத்தின்போது பன்றிக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சளி, இருமல் உள்ள மாணவர்களை அடையாளம் காணவும் பள்ளி நிர்வாகங்களுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குனர் மணி உத்தரவிட்டுள்ளார். எந்த மாணவருக்காவது இருமல், காய்ச்சல் இருந்தால் உடனே பன்றிக் காய்ச்சல் சோதனை நடத்துமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
TNC Last update : 10-08-2009 22:42
|
|
|