|
சிதம்பரத்தில்இபேராசிரியரிடம் ரூ.35 லட்சம் மோசடி:மும்பையில் பிடிபட்ட தென்ஆப்பிரிக்க வாலிபர் சிதம்பரம் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தினர் - சிதம்பரத்தில் பல்கலைக்கழக பேராசிரியரிடம் நூதன முறையில் ரூ.35 லட்சத்தை மோசடி செய்த தென்ஆப்பிரிக்க வாலிபர் சிதம்பரம் நீதிமன்றத்தில் நேற்று நேர்நிறுத்தப்பட்டார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் சிவபுரி முக்கிய வீதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 42). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் துறையில் பேராசிரியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரிடம் கடந்த 26-ந் தேதி தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த அர்னால்டு கிறிஸ்டியன் என்பவர் 50 ஆயிரம் ஈரோ (ரூ.35 லட்சம்) கொடுத்தால் அதை நான் ரசாயன பொடி தூவி மாற்றி உங்களுக்கு 2 லட்சம் மில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.10 கோடி) தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பிய பாஸ்கரன் ரூ.35 லட்சத்தை 50 ஆயிரம் ஈரோவை டாலராக மாற்றி அர்னால்டு கிறிஸ்டியனிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட அர்னால்டு கிறிஸ்டியன் ஒரு சூட்கேசில் வெள்ளை காகிதங்களை வைத்து அதில் ரசாயன பொடியை தூவி பாஸ்கரனிடம் கொடுத்து, அதை 24 மணி நேரத்திற்கு பிறகு பிரித்து பார்த்தால் அமெரிக்க டாலராக மாறி இருக்கும் என்று கூறினார்.
அதன்படி அந்த சூட்கேசை பெற்ற பாஸ்கரன் மறுநாள் காலை பிரித்து பார்த்த போது அதில் வெறும் காகிதம் மட்டுமே இருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த பாஸ்கரன் அப்போது தான் ரூ.35 லட்சத்தை பறிகொடுத்தது தெரிந்தது.
இது பற்றி பாஸ்கரன் சிதம்பரம் நகர காவல்துறையிடம் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தென் ஆப்பிரிக்கா வாலிபரை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அனைத்து விமான நிலையங்களுக்கும் அவர் தப்பித்து செல்லாதவாறு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மும்பையில் இருந்து தென் ஆப்பிரிக்கா தப்பித்து செல்வதற்காக மும்பையில் உள்ள ஒரு விமான நிலையத்தில் அர்னால்டு கிறிஸ்டியன் காத்து நின்றார். அப்போது அவரை மும்பை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக மும்பை காவல்துறையினர் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சிதம்பரம் நகர காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் நேற்று முன்தினம் இரவு அர்னால்டு கிறிஸ்டியனை கொண்டு வர மும்பைக்கு சென்றனர். பின்னர் மும்பை காவல்துறையினரால் பிடித்து வைக்கப்பட்ட அர்னால்டு கிறிஸ்டியனை தனிப்படை காவல்துறை சிதம்பரம் நகர காவல்நிலையத்துக்கு நேற்று அதிகாலை அழைத்து வந்தனர்.
அதையடுத்து அர்னால்டு கிறிஸ்டியனிடம் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் பிரெஞ்சு மொழியில் மட்டும்தான் பேசினார். ஆங்கிலம் தெரியாது என்று கூறி விட்டார். அதை தொடர்ந்து பிரெஞ்சு மொழி தெரிந்த மற்றொரு தென் ஆப்பிரிக்க வாலிபரை அழைத்து வந்து அர்னால்டு கிறிஸ்டியனிடம் விசாரணை நடத்தப் பட்டது.
ஆனால் அர்னால்டு கிறிஸ்டியன், பாஸ்கரன்தான் தன்னை முடி அலங்கார அறுவை சிகிச்சை செய்வதாக கூறி என்னை இங்கு வரவழைத்தார். அப்போது என்னிடம் ஒரு கருப்பு தாளை கொடுத்து அமெரிக்க டாலராக மாற்றி தாருங்கள் என்று முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார். அதையடுத்து அர்னால்டு கிறிஸ்டியனை காவல்துறையினர் கைது செய்து சிதம்பரம் மாஜிஸ்திரேட்டு 2-வது நீதிமன்றத்தில் நேர்நிறுத்தினர். நீதிபதி ஈஸ்வரமூர்த்தி அவரை நீதிமன்றகாவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் அர்னால்டு கிறிஸ்டியனை 7 நாட்கள் காவல்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிதம்பரம் நகர காவல்துறை முடிவு செய்துள்ளனர். அதன்பிறகுதான் அர்னால்டு கிறிஸ்டியன், பாஸ்கரனிடம் மட்டும்தான் ஏமாற்றி உள்ளரா? இது போன்ற பல பேரிடம் ஏமாற்றினாரா? என்ற உண்மைகள் தெரியவரும். இந்த சம்பவத்தால் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
TNC Last update : 10-08-2009 21:50
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|