|
தியாகராயர்நகரில் மட்டுமல்ல, சவுக்கார்ப் பேட்டை போன்ற ஏரியாக்களிலும் முறையன்றி கட்டப்பட்ட கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருடத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ மட்டும்தான் நடுத்தர குடும்பங்கள் துணி எடுக்க முடியும். திருமணம் போன்ற விசேச நாட்களில் மட்டுமே நகைக்கடைகளுக்கும் செல்வார்கள். நகைக்கடைகளை நகருக்கு மத்தியில் வைத்துவிட்டு, மக்கள் அன்றாடம் உபயோகிக்கிற காய்கறி சந்தையை நகருக்கு ஒதுக்குப்புறமாக வைப்பது என்ன நியாயம்?
சென்னை புதுப்பேட்டையில் இருக்கிற காய்லாங்கடை நடத்துகிறவர்களும், அந்தக் கடையில் வாங்குபவர்களும் மிக எளிய மக்கள், அந்தக் கடைகளை காலி செய்து தாம்பரத்தை தாண்டி போக சொல்லியிருக்கிறார்கள். காயலங்கடைக்கே உரிய கலையழகை ஒழித்து, அவர்களை அகதிகள் போல் மாற்றுகிற திட்டமல்லவா இது?
உண்மையில் தாம்பரத்தை தாண்டி வெளியில் கொண்டுபோக வேண்டிய கடைகள், சென்னை நகரத்தின் மத்தியில் இருக்கிற பிரம்மாண்டமான நகைக்கடைகளும், துணிக் கடைகளும்தான். இவைகளை இடமாற்றினாலே போதும். நகரத்தின் நெரிசல் குறையும்.
ஆனால் அரசு அதை செய்யாது. ஏனென்றால் சென்னை போன்ற பெருநகரங்களை பெரிய முதலாளிகளுக்கும், அவர்களிடம் வேலை செய்கிற உயர் அதிகாரிகளுக்கு மட்டுமான நகரமாக மாற்றி வருகிறார்கள்.
அதனால்தான் எளிய மக்களை அப்புறப்படுத்துவது நடக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் அதிகமான விலையேற்றதில் நிலங்கள் விற்கப்படுகிறது, வாடகை கட்டுக்கடங்காமல் உயர்த்தப்படுகிறது.
வாடகை பிரச்சினையின் காரணமாகவே பல குடும்பங்கள் நகரத்தை காலி செய்து அவர்களாகவே, புறநகர் பகுதிக்கு சென்றுவிடுகிறார்கள். இன்னும் கொஞ்சநாட்களில் சொந்த வீடு வைத்திருக்கிற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் ‘நல்ல விலை வந்தது’ என்று வீட்டை விற்றுவிட்டு புறநகர் பகுதிக்கு சென்று விடுவார்கள்.
இனி சென்னை போன்ற பெரு நகரங்களில், கூலி வேலை செய்பவர்களும், தொழிலாளர்களும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இல்லையென்றால், அவர்களை சார்ந்திருக்கிற, அண்ணாச்சி மளிகைக் கடை, நாயர் டீ க்கடை, பாயோட கறி க்கடை இவைகளையும் காண முடியாது.
இவர்களை விரட்டி விட்டு, பன்னாட்டு கம்பெனிகளும், பெரும் முதலாளிகளும், அவர்களின் அதிகாரிகளும் மட்டும்தான் இருப்பார்கள். அவர்களுக்காக மட்டுமே, நட்சத்திர விடுதிகளும், கேளிக்கை அரங்குகளும் இருக்கும்.
‘ஷாப்பிங் மால்கள்’ என்ற பெயரில் அழுக்கான உடை கொண்ட தொழிலாளர்களை அனுமதிக்காத கடைகள், அதிகம் கட்டணம் கொண்ட திரையரங்குகள் என்று அதன் அறிகுறிகள் இப்போதே ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டன.
வே.மதிமாறன் Last update : 24-12-2011 10:01
|
|
|