|
மார்கன் ப்ரீமன்,ஜிம் காரி நடித்த ஆங்கிலப் படமான "ப்ரூஸ் ஆல்மைடி"யின் தழுவல்தான் அறை எண் 305-ல் கடவுள் . புலிகேசியை எடுத்த சிம்புதேவன் ஆங்கிலப்படத்தை தமிழுக்கேற்ப பல மாற்றங்களை செய்துள்ளார்.சிறுவர்களின் மே மாத பரிட்சை விடுமுறையை குறிவைத்து படத்தை எடுத்திருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
நடிப்பு : சந்தானம்,கஞ்சா கருப்பு,பிரகாஷ்ராஜ்,ஜோதிர்மயி,குயி்லி
தயாரிப்பு : சங்கர் : "எஸ்" பிக்சர்ஸ்
இயக்கம் : சிம்புதேவ்
இசை : வித்யாசாகர்
திருவல்லிக்கேணி மான்சனில் ரூம்.305-ல் தங்கியிருக்கும் மொக்கை (கஞ்சா கருப்பு) ,ராசு (சந்தானம்) படும் கஷ்டங்களுடன் படம் ஆரம்பிக்கிறது. ராசு ஒரு பிபிஏ பட்டதாரி,மொக்கை பள்ளிக்கூடம் கூட முடிக்காதவன். வேலையில்லாத இவர்களால்வாடகை தர முடியவில்லை. இவர்களை பாஸ்கர் மேன்சனை விட்டு துரத்துகிறார்.
நண்பர்களால் ஒரு நாள் இரவு மட்டும் தங்க அனுமதிக்கிறார். விரக்தியின் விளிம்பிற்கே செல்கிற இவர்கள்,தங்களுடைய இந்நிலைக்கு காரணம் கடவுள் தான்! என கடவுளை கண்டபடி நிந்திக்கின்றனர். கடவுள் எண்ட்ரீ!! நவீன உலகின் கடவுளாக (பிரகாஷ் ராஜ்) இவர்களின் பிரச்சனைகளுக்கு செவி சாய்க்கிறார். ஒரு வாரம் இவர்களுடன் தங்க சம்மதிக்கிறார்.
தனது ஹைடெக் பெட்டியால் தனது உலகத்தில் (சொர்க்கம்!!) தோழர்களுடன் தொடர்பு கொள்வதையும் , அந்த பெட்டியால் தான் கடவுள் உலகத்தை நடத்துகிறார் என்பதை இருவரும் தெரிந்து கொள்கின்றனர். வார இறுதியில் கடவுள் இவர்களை விட்டு புறப்பட தயாராகிறார். இவர்கள் இன்னும் ஒர் இரவு தங்க கெஞ்சுகின்றனர்.கடவுளும் சம்மதிக்கிறார்.
விடு ஜூட்!! ஹைடெக் பெட்டியுடன் இருவரும் எஸ்கேப்!!!
பெட்டியில்லாமல் கடவுள் சாதாரண மனிதராகி விடுகிறார். உலகின் சக்தியெல்லாம் கிடைக்க ,இருவருக்கும் மஜா தான்!! இவர்களுக்கு பொன் ,பொருள் கிடைத்து தங்களுடைய காதலிகளுடன் இணைந்தார்களா?(சைட் ட்ராக்!! காதல் இல்லாமல் படமா?) . கடவுளுக்கு மறுபடியும் பெட்டி கிடைத்ததா? விடை வெள்ளித் திரையில்...
கஞ்சக் கருமியாக ரபீக் (தலைவாசல் விஜய்),ருத்ரன் (ராஜேஷ்) நாத்திகராக,கிரி (ஹனீபா) டீக்கடை நடத்துபவராகவும் அவரவர்கள் தங்களுடைய பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள்.மஹி(மதுமிதா),புவனா (ஜோதிர்மயி) படத்தின் ஹீரோயின்கள்.இவர்களுக்கு அவ்வளவாக வேலை ஒன்றுமில்லை.
கஞ்சா கருப்புக்கும்,சந்தானத்திற்கும் இப்படம் ஒரு மைல்கல் ! என்ன தான் காமெடி படமாக இருந்தாலும் ஒன்றிரண்டு இடங்களில் கண்ணீர் வரவழைத்து விடுகிறார்கள். ஆனால் படத்தின் ஹைலட் கடவுளான பிரகாஷ்ராஜ் தான்.சாதாரண பாத்திரத்திலும் மனிதர் பின்னியெடுக்கிறார்.
கடவுளாகட்டும் சரி,பெட்டி போனவுடன் ,தனது சக்தயிழந்து சாதாரண மனிதராகட்டும் சரி,நடிப்பால் நம்மை ஜெயித்துவிடுகிறார்.ஆனால் ராஜேஷுக்கும் இவருக்கும் நடக்கும் "கடவுள் இருக்கிறாரா" விவாதம் டீவி பட்டிமன்றத்தின் முன் இருப்பது போல் உள்ளது.
வித்யாசாகரின் இசையில் ஆவாராம் பூவுக்கும் ,மற்றும் தென்றலுக்கு நீ பாடல்கள் கேட்கும்படி உள்ளது.சௌந்தர்ராஜனின் ஒளிப்பதிவும்,சசிகுமாரின் ஆர்ட்டும் குறிப்பிடப்பட வேண்டியவை.
சிறுவர்களுக்காக ஆல்ப்ஸ் மலை,சூப்பர் மேன் என கதை விட்டிருக்கிறார்கள்.ஆனால் பல இடங்களில் அறிவுரை என்கிற பெயரில் கழுத்தில் கத்தி வைக்காத குறை..இயக்குனர் சிறுவர்களுக்காக படம் எடுப்பதா,முழுக்க முழுக்க காமெடி படமெடுப்பதா,அறிவுரையுடன் ஒரு நல்ல படம் எடுப்பதா என குழம்பிப் போயிருப்பது நன்றாக தெரிகிறது.
படத்தில் சிறு குறைகள் ஆங்காங்கே தென்பட்டாலும் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.
அறை எண் 305-ல் கடவுள் : சிறுவர்களின் மேமாத பட்டாசு
அதிகாலை ரேட்டிங் : **** Last update : 22-04-2008 14:21
|