|
ஏதோ புதிதாக செய்ய வேண்டும் என இயக்குனர் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. படத்தின் ஹீரோ பரத் புதிய "லுக்" வேண்டும் என கஷ்டப்பட்டிருக்கிறார்.
அந்த காலத்து ''சிகப்பு ரோஜாக்கள்'' முதல் சமீப கால "மன்மதன்'' வரை பார்த்த அதே கதையை மறுபடியும் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். படத்தை முழுவதுவதுமாக ஒதுக்கிவிட முடியாது. ஆங்காங்கே இயக்குனரின் புத்திசாலித்தனமும், ஒளிப்பதிவாளரின் கைவண்ணமும் பளிச்சிடுகின்றன.
கதை கரு என்ன? இயக்குனர் மூன்று கதைகளை கையில் எடுத்துக் கொண்டு முடிச்சுப் போட பார்த்திருக்கிறார். கார்த்திக் (பரத்) மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் இஞ்சினியர். இவர் ப்ரியா (மீரா ஜாஸ்மின்)-வை மலை சாரலில் சந்திக்கிறார். வேறென்ன? தொன்று தொட்டு வரும் தமிழ் சினிமாவின் பார்முலாப்படி இருவருக்குமிடையே காதல் ஏற்படுகிறது.
அடுத்த காட்சி என்ன என்பதை தமிழ் சினிமா பார்க்கும் ஆறாம் வகுப்பு மாணவன் கூட கூறிவிடுவான்.... பெண்ணைப் பெற்றவர்கள் எதிர்க்கிறார்கள். உடனே சினிமா ஜோடி செய்யும் அதே காரியத்தை கார்த்திக்-ப்ரியா செய்கிறார்கள்.ரொம்ப யோசிக்க வேண்டாம்...வீட்டை விட்டு ஓடிச்சென்று காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.ஒரு கதை முடிந்தது..அடுத்த கதை..
சந்தோஷமான காதலர்களுக்கு தொல்லை வருகிறது போலீஸ் ரூபத்தில். அவர் ப்ரியா (மீரா ஜாஸ்மின்) மீது இச்சை கொள்கிறார். மேலாக பலாத்காரம் செய்ய முயலுகையில் ஹீரோயின் இறந்து விடுகிறார். பழி ஹீரோ மீது விழுகிறது. செய்யாத குற்றத்திற்காக கம்பி எண்ணுகிறார் பரத்.
சிறையில் ஒரு நேபாளியை சந்திக்கிறார். அவர் வேலை செய்யும் பெண்களுக்காக குரல் கொடுப்பவர். அவரிடமிருந்து புதிய உத்வேகத்தைப் பெறுகிறார் ஹீரோ..நேபாளியாக மாறுகிறார். இரண்டாவது கதை முடிந்தது..மூன்றாவதைப் பார்போம்!
நேபாளியான பரத் என்ன செய்வார்!! வேலை செய்யும் இடத்தில் பெண்களிடம் வம்பு பண்ணுகிறவர்களை சைலண்டாக போட்டுத் தள்ளுகிறார். மருத்துவர்,ஆசிரியர், மென்பொருள் இஞ்சினியர் என நேபாளியாக பாடம் புகட்டுகிறார். ராபின் ஹுட் பாணியில் இவரை பிடிக்க டி.ஜி.பி கௌதம் (பிரேம்) புறப்படுகிறார். முடிவு வெள்ளித்திரையில் காண்க...
பழனியில் பக்கா மாஸ் ஹீரோவாக நடித்த பரத் இப்படத்தில் மூன்று பரிமாணங்களில் பின்னியுள்ளார்.கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி நடித்துள்ள பரத்துக்கு இப்படம் ஒரு மைல்கல் என்று தான் சொல்ல வேண்டும்.
வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறிய கண்களும்,விரிந்த ப்ரெட்டும் அணிந்திருப்பது சரியாக பொருந்த வில்லை.படத்தில் மீரா-ஜாஸ்மினுக்கும் பரத்துக்கும் கெமிஸ்ட்ரி சுத்தமாக வேலை செய்யவில்லை. கதாபாத்திரத்திற்கு சிறிது முதிர்ச்சியாக காணப்படுகிறார்.மற்றபடி சிறப்பாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. சரண்ராஜ், தண்டபாணி,ராஜா என அனைவரும் அவரவர் வேலையை நிறைவே செய்துள்ளார்கள்.
இப்படத்திற்கு இசை ஒரு ப்ளஸ்.ஸ்ரீகாந்த் தேவா குறிப்பாக "ஹே யூ" பாடலில் கலக்கியுள்ளார். மதியின் ஒளிப்பதிவும்,மதனின் எடிட்டிங்கும் குறிப்பிடப்பட வேண்டியவை. மயில்சாமி சிரிப்பு வரவழைக்க முயற்சிக்கிறார்."முகவரி" படத்தைக் கொடுத்த இயக்குனர் துரை இதில் கோட்டை விட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
பார்த்த உடனே காதல்,கல்யாணம் , பழிவாங்கல் என அரைத்த மாவையே அரைத்துள்ளார்கள்.ஆனால் இப்படத்தின் திரைக்கதை வித்தியாசப்படுத்துகிறது. இன்னும் நிறைய இடங்களில் அரை வேக்காடாக கோட்டை விட்டதை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
நேபாளி : ஜோரான ஆரம்பம் ,ஆனால் முற்றுப் பெறவில்லை.
நடிப்பு : பரத் ,மீரா ஜாஸ்மின், பிரேம்
இயக்கம் : துரை
இசை : ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு : ராமா சரவணன்
அதிகாலை ரேட்டிங்: ** Last update : 15-04-2008 11:58
|