|
முப்பது வருடத்திற்கு முன்னர் வந்திருக்க வேண்டிய படம். இப்பொழுது எடுத்து நம் உயிரை வாங்குகிறார்கள். பெரிதாய் கனவுகளுடன் வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களுக்காக ஹீரோவின் தியாகம்.இத்துடன் சைடில் காதல்... இயக்குனர் எந்த தைரியத்தில் இப்படிப்பட்ட படம் எடுத்தார் என்று தெரியவில்லை....
கதை என்ன? ஹீரோ நிதின் சத்யா சிவில் இஞ்சினியர். சம்பாதிக்கிறார்..அதனால் பணத்தை நண்பர்களுக்காக செலவிடுகிறார். அவரது நண்பர்கள் பிரேம்ஜி - வரலாறு படித்த பட்டதாரி,.அரசாங்க வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர்,.வஸ்ந்த் - பெரிய நடிகனாகும் கனவுகளுடன் இருப்பவர். இவர்களது வாழ்கையே ஹீரோவால் தான் ஓடுகிறது.
ஹீரோயின் எண்ட்ரீ! கிராமத்து பெண்ணாம். ஹீரோவிற்கு முதல் பார்வையிலே காதல். அதன்பிறகு அவளைப் பார்க்கும் போது துரதிர்ஷ்டவசமாக தலையில் அடிபடுகிறது. டாக்டரிடம் போனவுடன் , ஹீரோ இன்னும் சில நாட்கள் தான் உயிருடன் இருப்பாராம்.
ஹீரோயின் நலனுக்காக தனது காதலை தியாகம் செய்ய முடிவெடுக்கிறார். அதனால் தன் மீது வெறுப்பு வரும்படி செய்கிறார். இதனால் அவரது அண்ணனுக்கு கோபம் வருகிறது. ஹீரோவை பழிவாங்க நகரத்திற்கு வருகிறார். இப்பொழுது தான் பாதி கடல் தாண்டியுள்ளோம். மீதி படம் பார்ப்பதற்குள் நமக்கும் கொட்டாவி வருகிறது. சந்தோஷம் மற்றும் துக்கத்துடன் நாம் எதிர்ப்பாத்தபடியே படம் முடிவடைகிறது.
மோசமான திரைக்கதை, கேவலமான இயக்கம் என பட்டியல் நீளுகிறது. படம் பார்ப்பதற்குள் நமது பொறுமையை சோதித்து விடுகிறார்கள். படம் முடிவதற்குள் பாதி தியேட்டர் காலியாகிவிட்டது. நடிப்பு என்ற பெயரில் நடிகர்கள் நம்மை வதைக்கிறார்கள். வெண்ணிற ஆடை மூர்த்தி - பாபிலோனா, காமெடி என்ற பெயரில் நம்மை எரிச்சலூட்டுகிறார்கள்.
இசை பற்றி சொல்வதற்கு சிறப்பாக ஒன்றும் இல்லை. "ஒரு நாயகன் ரீமிக்ஸ்" நன்றாக செய்திருக்கிறார்கள்.
தோழா : தலைவலி மாத்திரை வாங்கிச் செல்வது நல்லது.
நடிப்பு : நிதின் சத்யா, ஜெனிபர், பிரேம்ஜி,அ ஜய்ராஜ், விஜய், லக்ஷணா
இயக்கம்: சுந்தரேஸ்வரன்
இசை : பிரேம்ஜி
தயாரிப்பு : பழனி,சுரேஷ்,பாஸ்கரன்,பரமசிவம்
அதிகாலை ரேட்டிங் : * Last update : 15-04-2008 01:54
|